தமிழ்நாட்டில் வேறு எந்த துறைகளிலும் இல்லாத அளவில், பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே ஆறு ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் பணியாற்றிவரும் நிலையில், ஏழாவது அலுவலராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், பள்ளிக் கல்வி ஆணையர் என்ற புதிய பதவி தோற்றுவிக்கப்பட்டு முதல் ஆணையராக அவர் பதவியேற்றார்.
அதற்கு முன் பல ஆண்டுகள் மத்திய அரசு பணியில் பணியாற்றிய அனுபவத்துடன், நிதி ஆயோக் அமைப்பிலும் வைத்யன் பணியாற்றியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அலுவலரான சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வி ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டபோது பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் கல்வியின் தரத்தினை உயர்த்தி, ஏற்றங்கள் வருமென ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் பதவி ஏற்றது முதலே பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் ஆணையர் செய்துவந்த நிலையில், ஒருகட்டத்தில் அந்த தேர்வு ரத்தானது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கான முயற்சியிலும் முழுமையாக ஈடுபட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றம்வரை சென்று இறுதியில் அந்தத் தேர்வும் நடைபெறாமல் ரத்தானது.
நடப்பு கல்வி ஆண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இவரது தலைமையிலான குழு ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு தாக்கல் செய்தது. அப்போது கல்வியாளர்களிடமோ, அரசு பள்ளி ஆசிரியர்களிடமோ, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடமோ எந்தவிதமான கருத்துக்களையும் சிஜி தாமஸ் வைத்யன் கேட்கவில்லை, இதனால் இந்த அறிக்கை தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அமைந்ததாக கல்வியாளர்கள் கருதினர்.
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்குச் சென்று பள்ளிகளை ஆய்வு செய்து கல்வியின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக ஆசிரியர்களிடம் கருத்துகளை கேட்டு வந்த நிலையில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தொழில் முதலீட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், புதியக் கல்விக் கொள்கையை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவிலும் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. அரசின் கொள்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்போது அரசு சார்பில் உறுப்பினர்களை நியமனம் செய்தால் பதவியைதான் குறிப்பிடுவார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கக்கப்பட்ட குழுவில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியும், பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உறுப்பினர் செயலாளராக இருப்பாரா? அல்லது சிஜி தாமஸ் வைத்யனாக நீடிப்பாரா? என்ற குழப்பமும் நிலவி வருகிறது.
இவரது மாற்றத்திற்கு சமீபத்தில் வெளியான அரசாணை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையான மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதங்களை பெற்று, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்ற அரசாணையை, கடந்த மாதம் 24ஆம் தேதி தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்தார்.
அரசாணை வெளியாவதற்கு முன்னரே, பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அமைச்சர் இப்படி கூறிய நிலையில், அவரது கருத்திற்கு எதிராக பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியானது அமைச்சருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு தெரிந்து துறைகளில் முடிவுகள் எடுக்கப்படுகிறதா? அமைச்சருக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுகிறதா? என்று விமர்சனங்கள் எழுந்தன .
இதையடுத்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய அமைச்சர் செங்கோட்டையன், அந்த அரசாணையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரோனா பாதிப்பு உள்ள நிலையில், அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளி திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டது.
அமைச்சர் கருத்திற்கு ஏற்ப கடைசி நேரத்தில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியானாலும், அமைச்சரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய அரசாணை வெளி வருவதற்கு, ஆணையர்தான் காரணம் என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தற்போது இதே துறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குனராக பணியாற்றி வரும் வெங்கடேஷ், பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.