சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஒருங்கிணைந்த தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனான கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.10) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "நேற்றைய தினம் சட்டப்பேரவையில் நடந்தது ஒரு கறுப்பு தினமாக பார்க்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்று ஆளுநர் நினைக்கிறார். அது வருத்தம் அளிக்கிற செயல்படாகப் பார்க்கிறோம். மேலும், ஆளுநர் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார்.
ஆளுநரைத் திரும்பப் பெறலாம்: அவர் செயல்பாடு, மத்திய அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் வகையில் உள்ளது. ஆளுநரைத் திரும்பப் பெற்றால் தான் மத்திய அரசுக்கு நல்ல பெயர் இருக்கும். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதுபோன்று அதிமுக, ஆளுநர் விவகாரத்தில் மௌனம் காத்து வந்தது.
திமுகவிற்கு கெட்டப்பெயர்தான்: ஆளுநரின் செயல் அரசுக்கு எதிராக இருப்பதுபோல் தான் தெரிகிறது. ஆனால், மறுபக்கம் திமுக அரசுக்கு உதவியாகத்தான் அவர் இருக்கிறார். தேர்தல் சமயத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. அரசு ஊழியர்கள், கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த இருபது மாதத்தில் திமுகவினர் கெட்டப் பெயர்தான் எடுத்துள்ளனர்.
ஆளுநருக்கு பாஜக ஆதரவளிப்பது தவறானது: பல பிரச்னை தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால், நேற்று ஆளுநர் செய்தது இது எல்லாவற்றையும் மறைத்துவிட்டது. முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது தவறில்லை என்று நினைக்கிறேன். அரசியல் தலைவராக அவர் செய்தது தவறு இல்லை. பாஜக, ஆளுநருக்கு நேரடியாக ஆதரவு தருவது தவறு.
தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேமுதிகவிற்கும் அமமுகவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தற்போது வரை தேமுதிக சுதீஷ் உடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். நாடாளுமன்றத்தேர்தலில் திமுவிற்கு மிகப்பெரிய பின்னடைவு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் மிக ஆபத்தானவர்.. அன்றே நான் சொன்னேன் '- ஹெச்.ராஜா