தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இதுவரை 23 ஆயிரத்து 298 நபர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் குணமடைந்து 11 ஆயிரத்து 256 பேர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 11 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் நோயாளிகள் மருத்துவமனைக்கும் வரும்போதே அதி்க மூச்சுத் திணறலுடன் வருகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. கரோனா தொற்று சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் போதுமானதாக இல்லை.
இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சென்னையிலுள்ள கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சிகிச்சை அளிப்பதற்கான மையங்களை உருவாக்கி உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி கட்டுப்பாட்டில் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய பகுதியில் 200 படுக்கைகளும், ராமாபுரம் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 500 படுக்கைகளும், துறைமுகத்தில் உள்ள போர்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில், 250 படுக்கைகளும் எனக் கூடுதலாக 950 புக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதியதாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில், புழலில் உள்ள உமையாள் ஆச்சி காலேஜ் ஆஃப் நர்சிங் வளாகத்தில் 160 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கட்டுப்பாட்டில் இருப்பவர்களில், சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அண்ணாநகர் கிழக்கில் வள்ளியம்மை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி, சேலைவாயல் திருத்தாங்கல் நாடார் கல்லூரி, கொடுங்கையூர் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி கல்லூரி, ஆர் கே நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அம்மா அரசு கல்லூரி, கேசிஎஸ் காசிநாடார் கல்லூரி ஆகியவற்றில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனை ஆகியவற்றிலும் புதியதாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்களை தங்க வைப்பதற்காக வேளச்சேரி குருநானக் கல்லூரி, திருவல்லிக்கேணி காயிதே மில்லத் கல்லூரி, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, கள்ளிக்குப்பத்தில் உள்ள ஷோகா ஐக்டா கல்லூரி, நுங்கம்பாக்கம் பெண்கள் கிறித்தவக் கல்லூரி ஆகியவற்றில் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தும் முகாமாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சேப்பாக்கம் விக்டோரியா மாநில கல்லூரி ஹாஸ்டல், நந்தனம் கலைக் கல்லூரி ஆகியவற்றில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்களுக்குத் தனிமைப்படுத்தும் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவ வசதியுடன் உள்ள இடங்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.