சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் இன்று காலை 11.15 மணியளவில் திடீரென சுமார் 20 மாணவர்கள் ஒரு மாணவரை சராமரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து உடனடியாக காயமடைந்த மாணவனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அடிவாங்கிய நபர் பொருளாதாரத்துறை மூன்றாம் ஆண்டு மாணவரான சீனிவாசன் என்பது தெரியவந்தது. 57f பேருந்து ரூட்டைச்சேர்ந்த சீனிவாசனுக்கும், தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டைச்சேர்ந்த 6d ரூட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்படவே, சுமார் 20 பேருக்கும் மேற்பட்ட 6d ரூட்டைச்சார்ந்தவர்கள் இணைந்து சீனிவாசனை தாக்கியது தெரியவந்துள்ளது.
’ரூட் தல’ பிரச்னையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ’ரூட் தல’ பிரச்னையில் மோதிக்கொண்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக, நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். புகார் ஏதும் கொடுக்கவில்லை.
மேலும், அடி வாங்கிய 57f ரூட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 6d ரூட் மாணவர்களுக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் சமயத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வீட்டு உரிமையாளர்களே உஷார்... ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி