சென்னை: வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் கும்முடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில், நேற்று (ஜூலை 18) மாலை வழக்கம்போல் புறப்பட்டு உள்ளது. அப்போது சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஏறி உள்ளனர். அப்போது, திடீரென ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டு உள்ளனர். மேலும், கடற்கரை ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது அவசர கால அபாயச் சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
பின்னர் ரயில் நிலையத்தில் இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் கத்தி, இரும்பு ராடு மற்றும் கற்களாலும் மாறி மாறி தாக்கி கொண்டு உள்ளனர். இதனால் சக பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். பின்னர், சுமார் அரை மணி நேரமாக நடைபெற்ற இந்த மோதலால் கடற்கரை ரயில் நிலையம் மிகவும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
இதையும் படிங்க: போதையால் பறிபோன உயிர் - முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு!
இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே காவல் துறையினர், மோதலில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது, கும்மிடிப்பூண்டி ரூட் கெத்தா, திருத்தணி ரூட்டு கெத்தா என ரூட்டு தல பிரச்னையில் இந்த மோதல் சம்பவம் உருவாகி மோதலில் முடிவடைந்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் மீதும் பொது சொத்தை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
அதேநேரம், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் 4 மாணவர்களை ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சென்னை புறநகர் ரயில்களில், குறிப்பாக சென்னை பறக்கும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், ரயிலில் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்வது போன்ற வீடியோக்களும், ரூட்டு தல விவகாரமும் மாணவர்கள் இடையே அதிகரித்து வருவதாகவும், எனவே அதற்கு தகுந்த அறிவுரைகளை பெற்றோர், கல்லூரி நிர்வாகம் மற்றும் ரயில்வே தரப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி; 5 பேர் கைது, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!