சென்னை சௌகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. கல்லூரி மாணவியான இவர், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு பிரபல உணவு நிறுவனத்தின் செயலி மூலம் சலுகை விலையில் 76 ரூபாய்க்கு பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் திடீரென ஆர்டர் ரத்தாகிய நிலையில் ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து அந்த மாணவி இணையதளம் மூலம் அந்த நிறுவனத்தின் சேவை மைய எண்ணைக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, வெறும் 76 ரூபாயை ஆன்லைனில் திருப்பிச் செலுத்த முடியாது, எனவே 5 ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் மொத்தமாக 5 ஆயிரத்து 76 ரூபாயாக திருப்பி அனுப்புகிறோம் என்று எதிர்முனையில் இருந்தவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.5,000 ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். மாணவி அனுப்பி பணம் வரவில்லை என்றும் திருப்பி அனுப்புமாறு அந்த நபர் மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மாணவியும் மீண்டும் மீண்டும் பணம் அனுப்பியதால் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. பின்னர், எதிர் முனையில் பேசிய செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டபோது அது அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவி இது தொடர்பாக, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.