கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவந்தன. முன்னதாக, நடப்புக் கல்வியாண்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அப்பொழுது சில கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
இதற்கிடையில் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் உள்பட அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் இன்றுமுதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். கல்லூரிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தேவைப்பட்டால் கல்வி கற்பிக்க வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இன்று கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டில் நடப்புக் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்திற்கான வகுப்புகள் நேரடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவிகள் கல்லூரிகளுக்கு முதல் நாளில் நேரடி வகுப்பிற்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு முறைகளுடன் தங்களது புதிய கல்லூரி நண்பர்களுடன் பழகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.