மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதைப்பற்றி அகில இந்திய தேசிய பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதில், ''இந்தக் கல்விக் கொள்கையில் மாணவர்கள் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டும். மேலும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும். இதற்காக மாணவர்கள் அதிக அளவில் படிக்க வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இருக்கிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு எந்தவிதமான ஆய்வும் இதில் கிடையாது.
இதுவரை பள்ளி, கல்லூரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மாநில அரசிடம் இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை யாரும் ஆய்வு செய்ய முடியாது. அவர்களே ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இந்தக் கல்விக் கொள்கையில் வியாபாரத்தினை அதிகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் கோடிங் கற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளனர். மாணவர்கள் ஆங்கிலம் கற்காமல் எவ்வாறு கோடிங் கற்றுக்கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான எந்த வசதிகளும் ஏற்படுத்தாமல் வாய்ஜாலத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கையில் பல்வேறு வாரத் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்கிறது.
தற்போது இருக்கக் கூடிய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவினை கலைத்துவிடுவோம் என கூறுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என கூறியபொழுது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மாநில அரசிடம் முறையிட சொல்லி கூறுகின்றது. ஆனால் தற்பொழுது முழு அதிகாரத்தையும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிடம் ஒப்படைக்க உள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
தொழில் படிப்பு பற்றி மாணவர்களை ஏமாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் பட்டயப் படிப்பு சான்றிதழ் தருவோம் என கூறுகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர். இதனால் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள் என கூறுவது மாணவர்கள் படிப்பினை குறைப்பதாகும்'' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’ - ஒரு ஒன்றிய பிரதேசம், 3 மாநிலங்கள் இணைப்பு!