இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெற்றோர்கள், கல்வியாளர்களிடையே ஆதரவு பெருகி வந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பருவத் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை தெரிவித்துள்ளது. இது குழப்பங்களை அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட போது, அது குறித்து பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியக்குழு வல்லுநர் குழுவை அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரையில், ‘‘இறுதிப் பருவத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம்.
அதற்கு முந்தைய பருவத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அகமதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்’’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சம் அதிகரித்து வரும் சூழலில் இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாகவும், அது தொடர்பான முடிவை பல்கலைக்கழக மானியக்குழு மறு ஆய்வு செய்யும்படியும் உயர்கல்வித்துறை வலியுறுத்தியது.
ஆனால், இப்போது அதே உயர்கல்வித்துறை இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் இல்லை என்று ஜூன் மாத இறுதியில் கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இப்போது இறுதி பருவத் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என எந்த அடிப்படையில் கூறுகிறது?
எத்தனை கோணத்தில் ஆய்வு செய்தாலும், தேர்வை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியமாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு என்னவாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படாமல், தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.