சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இயங்கி வருகிறது.
அதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையிலும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் அமைக்க வாய்புள்ளதா என்று பிப்ரவரி மாதத்தில் இருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தபட்டன. 2023 - 2024 தமிழக பட்ஜெட்டில், ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் கோவை (9,000 கோடி) மற்றும் மதுரை(8,500 கோடி) ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. அதன்படி போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 1இல் 19 போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 2இல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட கோரி வழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு என்ன?
சேலம்: சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோயில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 1இல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 2இல் 19 போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 1இல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 2இல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கிலோ மீட்டர் நீளத்திற்கு வழித்தடம் 3இல் 15 போக்குவரத்திற்கான நிலையங்கள் என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கிலோ மீட்டர் நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அடுத்த 30 ஆண்டு கால மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் மாற்றம் வரலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி.. ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!