சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச்சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், கல்லூரி முதல்வர் அளித்தப் புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சிஎம்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக காவல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கினார்.
தொடர் விசாரணையில் ஏழு மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், கல்லூரியின் கொள்கை விளக்கக் குறிப்பிலும், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், ராகிங் தடுப்பு சட்டங்கள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பெயர் பெற்ற கல்வி நிறுவனமான சிஎம்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிஎம்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம் எனவும், ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை எனத்தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக்கல்லூரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மாணவியிடம் சில்மிஷம்... பெயின்டர் கைது