சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக.13) சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசியவர், "இந்த ஆண்டு புதிதாக சேரவிருக்கும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணமில்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் நீங்கள் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது. கல்வியானது அனைவருக்கும் எளிய முறையில் கிடைத்தது, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்தோடு மாணவ சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய உண்மையான அக்கறையின் காரணமாக, அதுவும் உண்மையான அக்கறையின் காரணமாக, இந்த அரசு செய்யக்கூடிய கடமையாக இதனை நாங்கள் கருதுகிறோம்.
“இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு” என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல் நலம் சார்ந்தது மருத்துவம்.
இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இலவசம் என்று சொல்லுகிறபோது நீங்கள் இதைத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிப்பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி மக்களைத் தேடி மருத்துவம்
நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள் ஆகும். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறது. “இலவசங்கள் கூடாது” என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு இப்போது புதிதாக வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்ல இருப்பது மூன்றே மூன்று தான்.
முதலில் படிப்பு, இரண்டாவதும் படிப்பு, மூன்றாவதும் படிப்பு. உங்களது படிப்பில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்.
உங்களுக்கு ஆர்வமான தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள், உயர்கல்வியைத் தொடருங்கள். குறிப்பாக பெண்கள், பட்டம் வாங்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தகுதியான பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்.
பொருளாதார ரீதியாக நீங்கள் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையை பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது தான், ஏதோ சட்டமன்ற உறுப்பினராக அல்ல, முதலமைச்சராக அல்ல, உங்கள் தந்தையாகவே நின்று இந்த நேரத்தில் நான் உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம்