சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 504 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 400 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.4) நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள், தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Sand Shortage: 'மணல் தட்டுப்பாட்டை போக்க விரைவில் அறிவிப்பு வெளியிடும் அரசு!'