சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் ஸ்டாலின் இன்று (அக். 5) திடீர் ஆய்வுமேற்கொண்டார். அவருடன் தலைமைச் செயலர் வெ. இறையன்பு, முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் தங்களின் முக்கியமான புகார், கோரிக்கைகளை மனுவாக முதலமைச்சர் தனிப்பிரிவில் அளித்துவருகின்றனர். இங்குப் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
திடீர் ஆய்வு
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 5) முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வுமேற்கொண்டு, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
![முதலமைச்சர் தனிப்பிரிவில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13264929_1.jpg)
இந்த ஆய்வின்போது முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க காத்திருந்த மூன்று நபர்களிடம் ஸ்டாலின் நேரடியாக மனுக்களைப் பெற்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் நேரடியாக மனுக்களைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களுடைய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் பட்டா கோரி ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மனு அளிக்க வந்த வனிதா என்பவர் தெரிவித்தார்.
ஸ்டாலின் அண்மைக்காலமாக சென்னை மட்டுமல்லாது தான் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களிலும் திடீர் ஆய்வு செய்துவருகிறார்.
இதையும் படிங்க: நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம்