சென்னை: பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும் அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.19) ஒன்றிய ஜவுளி வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இதனிடையே, நேற்றைய தினம் (மே.18) திமுக நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலை இது தொடர்பாக சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரின் கடிதத்தை அளித்தனர். அப்போது, பருத்தியின் கடும் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பருத்தி நூலின் கடுமையான விலை உயர்வால் நெசவாளர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பருத்தி, நூல் விலை உயர்வு - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!