சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக உள்ளனர். சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். மாவட்டக் கழகச் செயலாளர்களாக பதவி வகிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.
எனவே அனைவரும் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும். கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா?
தொண்டன் உழைக்காமல் - நிர்வாகி வேலை பார்க்காமல் - யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்தி தான் வர வேண்டும். அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் – பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்" என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும் - முக ஸ்டாலின்