செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.
முக்கியமாக தமிழ்நாடு காவல் துறையில் இதுவரை அலுவலர்கள், காவலர்கள் உள்பட 84 பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள். இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 3.25 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 71 நபர்களில் 36 பேருக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது கோடி ரூபாயினை நிவாரணத் தொகையாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஞ்சியுள்ள 35 பேருக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து, அவர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு- போக்குவரத்து என எப்பணியிலும் அர்ப்பணிப்பைத் தருகிற காவல் துறையினரில் 84 பேர் கரோனா பணியில் இன்னுயிர் இழந்திருக்கிறார்கள். 13 வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 36 குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளேன். அரசு, காவலர் நலன் பேணும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜாலியாக தன் கார்ட்டூன் படத்தை பகிர்ந்த தர்மபுரி திமுக எம்பி: கடுப்பான நெட்டிசன்கள்