சென்னை: மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு கரோனா பரவல் கட்டுப்பாடுகள் குறித்து வெளியிட்டுள்ள காணொலிச் செய்தியில் பொதுமக்களுக்குப் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், "உங்கள் எல்லோருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2022ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது.
-
புத்தாண்டை வரவேற்போம்!
— M.K.Stalin (@mkstalin) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
கொரோனாவுக்கு விடைகொடுப்போம்! https://t.co/YeyxOpkfii
">புத்தாண்டை வரவேற்போம்!
— M.K.Stalin (@mkstalin) January 1, 2022
கொரோனாவுக்கு விடைகொடுப்போம்! https://t.co/YeyxOpkfiiபுத்தாண்டை வரவேற்போம்!
— M.K.Stalin (@mkstalin) January 1, 2022
கொரோனாவுக்கு விடைகொடுப்போம்! https://t.co/YeyxOpkfii
நாம் மீண்டு வந்திருக்கிறோம்
கரோனா என்ற நோய்த்தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலையிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோதுதான், உங்களுடைய முதலமைச்சராக மட்டும் அல்ல; உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதுதான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. என்னுடன் நம் அமைச்சர் பெருமக்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதை மறக்கவே முடியாது. அதனால் குறைந்த கால அளவிலேயே, இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தினோம்.
உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன்
அதற்குப் பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் முக்கியக் காரணமாக இருந்தது. தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து நடத்தியபோது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்டீர்கள். உங்களுடைய ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
கரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒரு ஒத்துழைப்பைத்தான் இந்த புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன்.
ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு
கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்போது, ஒமைக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்திருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு, தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.
வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வருபவர்களுக்கான பரிசோதனை, நம் மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கின்றன. கூடுதல் தேவையை யோசித்தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
நீங்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை
அதனால் நீங்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்குத் தேவைப்படுகிறது. ஒமைக்ரான் பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசு போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான்.
அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள். COVID Appropriate Behaviour என்ற கோவிட் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களைக் கட்டாயமாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்
கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளைத் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். அவசரத் தேவைகள், அன்றாடப் பணிகளுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
சானிடைசர் பயன்படுத்துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாகக் கையைக் கழுவுங்கள். முகக்கவசத்தை கட்டாயம் பொதுவெளியில் போட்டுக்கொள்ளுங்கள். அதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல; உங்களைச் சார்ந்திருக்கக்கூடிய அனைவருடைய பாதுகாப்பிற்காகத்தான்.
சிறார்களுக்குத் தடுப்பூசி
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் தவணை போட்டவர்கள், உங்களுக்குச் சொல்லப்பட்ட தேதியில் இரண்டாவது தவணை போட்டுக்கொள்ளுங்கள்.
ஜனவரி மாதத்திலிருந்து மத்திய அரசு, 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அந்தத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தும். உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறார்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுக்கொண்டு வாருங்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்
தடுப்பூசி முழுமையாகப் போட்டிருந்தால், ஒமைக்ரான் நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதனால் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனே கண்டிப்பாகப் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்களுடைய நலன் எனக்கு மிகவும் முக்கியம்
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் உங்களுடைய முதலமைச்சரான எனக்கு மிகவும் முக்கியம். அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குத் தமிழ்நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்புத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும், மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வதுடன், புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா