சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள போட்டி நடைபெறும் அரங்கினை நேற்று (ஜூலை 27) முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பக்கலைத் தூணை திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து விளையாட்டு அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா சார்பில் போட்டியில் பங்குபெறவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.
சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஜூலை 28) பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிக்கான தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறை, தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கு உள்ளிட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். அத்துடன் விளையாட்டுப் போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.