சென்னை: வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
தற்போது இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “இந்தியாவுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுய ஆட்சி, ஏழைகளுக்கு வழங்கக்கூடிய நலன் இது எல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், அதிகார வர்க்கத்தில் சிக்கி இந்தியா சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதனால் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை அகற்ற வேண்டும் என்பதற்காக வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் 15 எதிர்கட்சிகள் கலந்து கொண்டது. தற்போது பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதேபோல் இந்தியாவில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். அகில இந்திய அளவில் பெரிய கூட்டணியாக மாநில வாரியாக சேர்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாட்னா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டம் என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் அமையும் என்ற நம்பிக்கையில் நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது இணைந்துள்ள கட்சிகளின் கூட்டணிக்கு INDIA (இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம் மும்பையில் நடத்ததற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். 2024 புதிய இந்தியா உருவாகும். அதற்கு உங்கள் (பொதுமக்கள்) ஒத்துழைப்பு வேண்டும். அன்றைய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை சுட்டிக்காட்டினேன். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் குறிக்கோள். அதைப்பற்றிதான் தற்போது பேசி வருகிறோம்.
அமலாக்கத்துறை சோதனை எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப் போக நிறைய நடக்கும். அனைத்தையும் சந்திக்க தயாராக உள்ளோம். சட்ட ரீதியாக சந்தித்து வெற்றி காண்போம். பாஜக கூட்டணி கட்சிகளில் உள்ளவர்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளை அமலாக்கத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது.
இதுதான் அவர்களுக்கு நியாயமான விசாரணை. அவர்களைப் பொறுத்தவரை, இன்றைய பாஜக கூட்டணி கட்சிகளின் சந்திப்பில் யாரை பக்கத்தில் அமர்த்தி உள்ளார்கள், ஊழல்வாதி என அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்... என்ன காரணம் தெரியுமா?