சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று (நவ.29) மாலை முதல் சென்னையில் கன மழை பெய்தது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீரானது பல்வேறு இடங்களில் தேங்கியது. இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது, கன மழையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவது என மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வருகின்ற அவசர கட்டுபாட்டு அறை மற்றும் கண்காணிப்பு மையத்தில் இன்று (நவ.30) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு குழு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில், பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், புதிதாக புயல் உருவாக உள்ளதையொட்டி, பெய்யும் கன மழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகள் செய்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மழை நீர் தேங்கியுள்ள இடங்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழை நீரை பெரிய அளவிலான மின்மோட்டார்களை வைத்து அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது அவசர கட்டுபாட்டு மையத்திற்கு வந்திருந்த பொதுமக்களின் புகாரை அவரே கேட்டறிந்து பொதுமக்களிடம் உரையாடினார்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி; எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகத்தைச் சூழ்ந்த மழை நீர்!