சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகழை உலக சரித்திரத்தில் (Guinness) இடம் பெற கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி இன்று காலை (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பரிசு வழங்கும் விழா சென்னை, தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியின், பொன்முடி, சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்ணடனர்.
73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட இந்த மாரத்தான் போட்டிக்கு, வெளி நாட்டு தூதர்கள் கின்னஸ் சாதனை சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர். 41 கி.மீ ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற ஷான் சல்வர் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். மேலும் இரண்டாம் பரிசு பெற்ற அபிஷேக் என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற செல்வம் என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும், பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற ஜோதி சங்கர் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பெற்ற மீனா என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற ஆஷா திபி என்பவருக்கு ரூ. 25 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.
21 கி.மீ. போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற லட்சுமணன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், இரண்டாம் பரிசு ரஞ்சித்குமார் என்வருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற தர்மேந்திரன் என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருநங்கை பிரிவில் முதல் பரிசு பெற்ற சசிகலா என்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கினார். இரண்டாம் பரிசு யாழினி என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு பூவிழிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக முதலில் 10 திருநங்கைகளுக்கு தலா ரூ. 1000 என வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மட்டுமின்றி, மாரத்தான் அமைச்சராகவும் விளங்கி வருகிறார், மா.சுப்பிரமணியன். அவரை எல்லோரும் இப்போது மாரத்தான் மாசு என்று தான் கூப்பிட்டு வருகிறார்கள். மா.சுப்பிரமணியன் போல் யாரும் ஓட முடியாது. அவரைப் போல் நான் கூட ஓட முடியாது. மேலும் எந்த அமைச்சரும், எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஓட முடியாது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உலகம் முழுவதும் நடைபெறும் மாரத்தான் போட்டியில் ஓடி வந்துள்ளார். ஆட்ட நாயகன் என்று தான் நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால் மா. சுப்பிரமணியம் ஒரு ஓட்ட நாயகன். 15 மாதங்களில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை கட்டி சாதனை படைத்தவர் இவர். இந்த மாரத்தான் போட்டியில் வந்த பணத்தை அரசு மருத்துவமனை கட்டுவதற்காகத் தான் பயன்படுத்துகிறோம்.
கலைஞர் என்றாலே கின்னஸ் சாதனை தான். உலகில் முதல் முறையாக திருநம்பிகள், திருநங்கைகள் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாரத்தான் போட்டியில் காவல் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இது ஒரு சாதாரண மாரத்தான் இல்லை. இது ஒரு சமூக நீதி மாரத்தான். இந்த மாரத்தான் போட்டி மூலம் புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கே வராத திட்டத்திற்கு வரி விதிக்கும் மாநகராட்சி... திணறும் திருப்பூர் மக்கள்!