சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை - உழவர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயைப் பெருக்கிட வேளாண்மை - உழவர் நலத் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, இத்துறைகளில் காலியாக உள்ள 161 உதவி வேளாண் அலுவலர், 230 உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, ஐந்து உதவி வேளாண் அலுவலர் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும், ஐந்து உதவித் தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கு ‘சாதனை ஊக்கத்தொகை’