சென்னை: பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்றுபெறும் பாராலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இது, ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் ஆகும். கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டின் ‘தங்கமகன் என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மீண்டும் பெருமை தேடித் தந்திருக்கும் அவரைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அவரின் வெற்றி இந்தியாவை பெருமை கொள்ளச் செய்வதாக தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு வழியாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஆப்கன் வீரர்!