சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (ஜூலை 4) மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
அவருடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் சென்றனர்.
45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கினார். மேலும், கரோனா நடவடிக்கைகள் குறித்து மாதம் தோறும் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வருகிறார்.
இதற்கு முன்பாக மார்ச் 31, மே 4, ஜூன் 2 ஆகிய தேதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கரோனா நடவடிக்கைகளை குறித்து விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4,280 பேருக்கு கரோனா: ஒரு லட்சத்து ஏழாயிரமாக உயர்ந்த பாதிப்பு!