சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 11) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காணப்படுகிறது. சென்னைப் பகுதியில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் கரோனா (Cluster) காணப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகள் ஒருகிணைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பணி இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே யாருக்காவது தொற்று ஏற்பட்டால், அனைவரையும் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
கரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவையை கண்டிப்பாக கடைப்பிடித்திட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி ஒன்றே கரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அதனை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும்" என்றார்.