சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிச.27) நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், 171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 194 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை அடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றி வருகிற நபர்களுக்கு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர்’ விருதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி உதவித்தொகை: திருத்தி அமைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்புக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், 2 ஆயிரத்து 974 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 31 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
ரூ.175 கோடி மதிப்பீட்டில் விடுதிகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி விடுதிகள் மற்றும் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்திர உணவுக் கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரத்து 100 ரூபாயிலிருந்து, ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 விடுதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரூ.475 கோடியில் உட்கட்டமைப்பு பணிகள்: அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் 475 கோடி ரூபாய் செலவில், 25 ஆயிரத்து 262 அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தொழில் முன்னோடிகள் திட்டம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை உருவாக்கியிருக்கிறோம். கடந்த ஓராண்டுகளில் 102 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. தாட்கோவில் செயல்படுத்தப்படுகிற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலமாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதியம் 2022-2023ஆம் நிதியாண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி, வணிகம் சார்ந்த புதிய தொழில் தொடங்க, திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் ஒன்றறை கோடி ரூபாய் வரை கடன் பெற உதவுகிற ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ நம்முடைய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ரூ.10 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு: ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிற வகையில், உன்னிக்குச்சி மூலமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. காடுகளில் வாழ்கின்ற பழங்குடியினரின் வன உரிமையைப் பாதுகாக்க, 11 ஆயிரத்து 601 தனிநபர் வன உரிமைகளும், 691 சமூக வன உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, 10 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், பழங்குடியினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டு, செயல்படத் துவங்கியிருக்கிறது. சமூக நிலைகளில் உயர்த்துகின்ற அனைத்து முயற்சிகளையும் நம்முடைய அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவில் இருந்து விலகலா? - காமெடி பண்ணாதீங்க; தருமபுரி எம்.பி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்!