கரோனா தொற்று தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 50 லிருந்து 67ஆக அதிகரித்துள்ளது. கரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து ஐந்து பேர் குணமாகியுள்ளனர். நேற்றுவரை 50 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், தற்போது ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் என மொத்தம் புதிதாக 17 பேருக்குப் புதிதாகத் தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா பரவலில் தமிழ்நாடு இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்குச் செல்லாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தனிமைப்படுத்துதலே கரோனாவுக்கு தற்போதைய மருந்து. 1.5 கோடி முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி ஆவினுக்கு வந்த 60 ஆயிரம் லிட்டர் பால்: தொழிலாளர்கள் கிலி