சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் தங்களது தேர்தல் பரப்புரை தொடங்கி மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருகிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சூறாவளித் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
டிசம்பர் 19ஆம் தேதி தனது சொந்த தொகுதியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 29 முதல் ஜனவரி 4ஆம் தேதிவரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
இதன்படி, நேற்று நாமக்கலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள், மாநிலத்தின் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை எடுத்துரைத்து வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி, இன்று திருச்சியில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: 'அடுத்த முதலமைச்சர் ஈபிஎஸ்தான் என்று மக்கள் தங்கள் நெஞ்சில் குறித்து வைத்துவிட்டார்கள்'