இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020 மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு, கரோனா வைரஸை உயிர்கொல்லி தொற்று வைரஸ் என அறிவித்து அதன் பரவலை தடுப்பதன் மூலமும், உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமும் மக்களின் உயிரைக் காத்திடுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக விரைந்து செயல்பட அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அரசும் கரோனா தொற்றை பேரிடராக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மற்றும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு கோவிட் -19 நெறிமுறைகள் 2020ஐ வெளியிட்டுள்ளது. மேலும், பிரதமர் 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும் எண்ணிக்கையிலான நோய்த் தொற்று இனங்களைத் திறம்படக் கையாள்வதற்கு, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்களை ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பை சந்திக்கின்றனர். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தேவைப்படுகிறது.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், கோவிட்-19 தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80ன் கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50ன் கீழ் விலக்களிக்கப்படும்.மேலும் நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டைப் பெறுவதற்கு தங்களின் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்களது முழுமையான முகவரி, இ-மெயில் விவரம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
தற்போதைய நிலையில், நேரிடையாக முதலமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு