தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசும்போது,
"தமிழ்நாட்டில் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உயர்தர-மேம்பட்ட தொழில்நுட்ப இயந்திரங்கள், உபகரணங்களை நிறுவி உற்பத்தியைப் பெருக்க, தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியமாக தற்போது வழங்கப்பட்டுவரும் ரூ.30 லட்சம் என்ற மானிய உச்சவரம்பை உயர்த்தி ரூ.50 லட்சம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 64 கயிறு தொழிற்கூட்டுறவு சங்கங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பு கிடைத்தது. கஜா புயலால் ஏற்பட்ட தாக்கத்தினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கயிறு சங்கங்கள் போதுமான மூலப்பொருட்கள் கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளன.
இந்த கடினமான சூழ்நிலையினை சமாளித்து, கயிறு சங்கங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இயங்கும்பொருட்டு, கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பொதுத் துறை நிறுவனங்களான பவர்கிரீட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன் காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்பாக்கம், நாகப்பட்டினம் மாவட்டம் - செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு அதிகமுள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சிபெற ஏதுவாக, அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்டகால, குறுகியகால புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும்.
அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெறும் பெரும்பாலனவர்கள் ஏழை, எளிய மாணவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் சுயதொழில் செய்வதை ஊக்கப்படுத்திடும் நோக்கில், அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 14 சுய வேலைவாய்ப்பு தொழிற்பிரிவுகளில் ஆண்டுதோறும் வெற்றிகரமாக பயிற்சி முடித்துச் செல்லும் பத்தாயிரம் நபர்களுக்கு, அவரவர் தொழிற்பிரிவிற்கு ஏற்ப ரூ.7.50 கோடி செலவில் கருவித் தொகுப்புகள் வழங்கப்படும்.
சிவகங்கை, நாமக்கல், காரைக்குடி, திண்டுக்கல் (மகளிர்), தூத்துக்குடி, சேலம் (மகளிர்), மதுரை (மகளிர்), தருமபுரி, புதுக்கோட்டை, புள்ளம்பாடி (மகளிர்), நாகலாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 12 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் புதிதாக ஏற்படுத்தப்படும்" என அறிவித்தார்.