கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பல்வேறு தனியார் அமைப்பினரும் தொண்டு நிறுவனத்தினரும் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கே.பி.கார்மெண்ட்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை மோரை ஊராட்சியிலுள்ள ஐந்தாயிரம் பேருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட 13 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன.
மோரை ஊராட்சி கன்னியம்மன் கோயில் சந்திப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன், கே.பி.ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சுமோத் சன்னி, மெர்சி தம்பதியினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து பொருள்களை 15 டாடா ஏசி வாகனங்கள் மூலம் பொதுமக்களைத் தேடி வீடு வீடாகச் சென்று வினியோகிக்கப்பட்டது. அப்போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் ”தடுப்பூசி போட்டு விட்டீர்களா? கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், வீட்டைவிட்டு யாரும் வெளியே வராதீர்கள், உங்களுக்குத் தேவையான எந்த உதவியாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்' என ஊராட்சிமன்றத் தலைவர் திவாகரன் கூறினார்.
ஏற்கனவே இந்த நிறுவனம் சார்பில் ஆடைகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட 45 ஆயிரம் முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது. தற்போது, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.