தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குகள் பதிவுசெய்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கவும் கோரப்பட்டது.
இதற்கு அனுமதி வழங்க இயலாது எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அஞ்சல் மூலம் ஆசிரியர்கள் வாக்களிக்கப் போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். வாக்களிக்கத் தவறியவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தலைமைத் தேர்தல் அலுவலர் அவமதித்துவிட்டதாகக் கூறி, மீண்டும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் அலுவலர் சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனுவில் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அஞ்சல் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்த 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தலைமைத் தேர்தல் அலுவலரின் மனு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால், இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு'