மே மாதத்தில் நடைபெற இருந்த 2020-21ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தார். மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழ்ங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலாளர்கள், சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், ஒருங்கிணைந்த மாநிலத் திட்ட இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மதிப்பெண்களை சரிபார்க்க உத்தரவு
இந்நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "12 ஆம் வகுப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்காக அவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை ஜூன் 25 ஆம் தேதி முதல் 30 ந் தேதிக்குள் சரிபார்த்து அனுப்ப வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்களை சாிபார்க்கும் போது 11 ஆம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வழங்கிய மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண்களையும் சரிபார்க்க வேண்டும்.மாணவர்களின் பெயர் பட்டியலை 25 ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் தேர்வுத்துறை உதவி இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, வேறு மாநிலங்களில் படித்த மாணவர்கள், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் ஒரு முறைக்கு பதில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 11 ஆம் வகுப்பில் சேர்ந்து இருப்பார்கள்.
தமிழ்நாடு தேர்வுத்துறை நடத்தும் தேர்வு தவிர , பிற பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண் விவரம் அரசுத் தேர்வுத்துறையில் இருக்காது. இதனால் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி உள்ளதால், அவர்களின் மதிப்பெண்கள் அரசுத் தேர்வுத்துறையில் இருக்கும்.
எனவே சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வேறு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பெறப்படுகிறது. இந்த மதிப்பெண்களையும் பயன்படுத்தி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
மதிப்பெண் சான்றிதழ்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகள் இறுதி நிலையை அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கிய உடன், அரசாணையாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.