தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களில் அக். 2ஆம் தேதி கிராமசபை கூட்டம் காலை 11 மணிக்கு நடத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அறிவித்திருந்தது. இந்த கிராமசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், கிராமசபையில் கலந்துக் கொண்டவர்களின் விபரங்களையும், புகைப்படத்துடன் பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தன. இதனால் கிராமசபை கூட்டம் நிறைவடைந்த உடன் அதற்கான புகைப்படங்களை கிராம ஊராட்சி செயலாளர்கள் பதிவேற்றம் செய்தனர். சுமார் 14 இடங்களில் மட்டும் கிராமசபையில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெங்கு பரவுவதை கட்டுபடுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. கிராம சபை கூட்டத்தில் மாணவர்கள் இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது கிராமத்தில் உள்ள பல்வேறு குறைகள் குறித்து பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறியதால், பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அதிமுக பெண் கவுன்சிலரை, கிராம சபை கூட்டத்தில் ஒருமையில் பேசினார். சென்னை அருகே அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டம், வன்னியம்பட்டி கிராம சபை கூட்டத்தில் வன்னியம்பட்டி விளக்கில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்றி விட வேண்டும் என போட்ட தீர்மானத்தை அரசு ஊழியர்கள் மதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலக்கோடு தொகுதி, தோமலஅள்ளி கிராமத்தில் முறையற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்துக் கொண்டு கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சிச் செயலாளர் வாக்குவாதம் செய்தார். அதன்பின் கைலப்பானது.
திண்டுக்கல் மாவட்டம், பாடியூர் கிராமத்தில் நிரந்தரமாக ஊராட்சி செயலாளர் இல்லை என்பதால், கிராம சபை கூட்டத்தை மக்கள் மொத்தமாக புறக்கணிப்பு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை தராதது, கிராம சுத்தம் செய்வோர் சம்பளம் தராதது போனமுறை குடுத்த மனு நிறைவேற்றாதது போன்றவற்றை கூறி புறக்கணித்துள்ளனர். கடலூர் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மா. முத்துகாளிப்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் புதிய அருந்தியர் தெரு சாக்கடை வசதி, அண்ணா நகர் இலவச வீட்டு மனை பட்டா , மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் ரேஷன் கடை அமைக்க கிராம சபை தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி ஒன்றியம் வேந்தோணி கிராமசபை கூட்டத்தில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தை ராணியின் கணவர் மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் போது கிராமசபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்களால் இந்த ஆட்சியில் எந்த பலனும் அளிப்பதில்லை, இந்த கிராமசபைக் கூட்டம் படம் காட்டும் வேலையாகவே நடத்தப்படுகிறது. மக்கள் போராடினால் தான் தீர்வு வரும் என தெரிவித்துள்ளார். அப்போது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உள்ளிட்ட பிற துறையின் அதிகாரிகளும் பதில் கூறாமல் இருந்துள்ளனர். மணலூர்பேட்டை அடுத்த காங்கியனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்களை இழிவாக பேசியதாக கூறி தீர்மானம் நிறைவேற்றக் கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் அனுமந்தபுரம் பஞ்சாயத்து சொன்னம்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் கூட்டம் முடிந்து இறுதியில் அவர் எந்த விதமான கையெழுத்தும் வாங்காமல் ஊராட்சி செயலாளர் சென்று உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் லில்லி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை, போக்குவரத்துறை, நூலகம், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் கிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கிராமசபை கூட்டத்தில் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று கிராமசபை கூட்டத்தில் நடைபெற்ற அடிதடியின் காரணமாக 14 மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: CCTV: சென்னையில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி