சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே நேற்று (மே.16) காலை 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரோந்து காவல்துறையினர் உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களைப் பிடிக்கச் சென்ற போது சிதறி ஓடினர்.
அப்போது அங்கு நின்றிருந்த 6 மாணவர்களை மட்டும் காவல்துறையினர் பிடித்தனர். இந்த தாக்குதலில் ஒரு மாணவருக்குக் காயம் ஏற்பட்டது. சிதறி ஓடிய மாணவர்கள் கல்லூரிக்கு அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மறைத்து வைத்திருந்த பையை சோதனையிட்ட போது 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பிடிபட்ட ஆறு மாணவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரயிலில் செல்லும் திருத்தணி ரூட் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், பூந்தமல்லி பஸ் ரூட் மாணவர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்ற மோதல் கடந்த சில நாட்களாகவே நடந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
![பட்டாக் கத்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-busroute-script-7202290_16052022225254_1605f_1652721774_956.jpg)
இதனால் திருத்தணி ரூட் மாணவர்கள் தங்களது கெத்தை காண்பிக்க நேற்று பூந்தமல்லி செல்லும் பேருந்தில் அட்டகாசம் செய்துள்ளனர். பின்னர் ஹாரிங்டன் சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே திருத்தணி ரூட் மாணவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, பட்டாக்கத்தி மற்றும் காலி மதுபாட்டில்களை வீசி கெத்து காண்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, உடனடியாக காவல்துறையினர் வந்ததால் கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு கத்திகளை விட்டு மாணவர்கள் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக பூந்தமல்லி பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் வந்ததால் சிதறி ஓடியுள்ளனர். அப்போது பச்சையப்பன் கல்லூரியில் ரகளை நடக்க வாய்ப்பிருப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட 6 மாணவர்களும் நடக்கக்கூடிய பிரச்சனையை வேடிக்கை பார்த்ததும், இந்த பிரச்சனைக்குதொடர்பில்லை என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராகும் படி அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
![பட்டாக் கத்திகளுடன் 'சீன் போட்ட' பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-busroute-script-7202290_16052022225254_1605f_1652721774_303.jpg)
பிரச்சனையில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்து வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த மாணவர்கள் இடைநீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புத்தகப்பையில் பட்டாக்கத்தி: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்