சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி கிளம்பிய மின்சார ரயில் காலை 9:15 மணி அளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீரென மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பெரம்பூர் லோகோ நடைபாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
உடனடியாக ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மின்சார ரயிலின் கதவுகளை மூட முயற்சி செய்தனர். ஆனால் கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில கல்லூரி மாணவர்களுக்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளுக்கு முண்டியடித்த மக்கள்! கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்த தாம்பரம்!