சென்னை: தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் ஆக.5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் 7ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா. அன்புவேந்தன், ஜூலை 27ஆம் தேதி புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அப்புகாரை அடுத்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. இதற்கு ஆதி திராவிடர் நலத்துறை முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய குடியரசு கட்சி தமிழக மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், "திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய நிதியை ஒதுக்காமல், பட்டியலின சமுதாய மக்களின் நலநிதியை மடைமாற்ற முயற்சித்து வருகிறது. மத்திய அரசால் ஆதிதிராவிட நலத்திற்காக கொடுக்கப்படும் நிதியை (Special Component Plan) பொது நிதிக்கு பயன்படுத்துவது, சரி இல்லை.
இத்திட்டம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1982ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது, திட்டக் குழு மூலம், துணை திட்டம் (sub plan) மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர்களுக்காக உதவும் வண்ணம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது அதன் செயல் இழந்து இருக்கிறது" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய தமிழரசன், "தமிழகத்தில் கடந்த இரண்டு நிதி ஆண்டும் மற்றும் இந்த நிதி ஆண்டில் ஆதி திராவிடர் மக்களுக்காக எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. இனி வரும் நிதிஆண்டில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் பெண்களுக்கு மட்டும் 3000 ரூபாய் அரசாங்கம் தந்தால் நாங்கல் வரவேற்போம். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, பொது நிதியாக பயன்படுத்தினால் அது மரபு மீறிய செயல் ஆகும்.
கேரளாவில் இருப்பதை போல ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தில் பட்டியலின மக்களை கணக்கெடுத்து, ஏற்கனேவ இருக்கும் 18+1 (19) சதவீத இட ஒதுக்கீட்டை 21 சதவீதமாக உயர்த்த வேண்டும். பட்டியலின மக்களுக்காக தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும், குறைந்தபட்சம் வெள்ளை அறிக்கையாவது தர வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், "அதேபோல் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர செய்ய வேண்டும். 1996ஆம் ஆண்டு, தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது தான், தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் நிலை மாற வேண்டும்" என இந்திய குடியரசு கட்சி தமிழக மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை 60 மூடைகளுக்கு மேல் அனுமதி அளிக்காத நெல் கொள்முதல் மையங்கள்: தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்கும் அவலம்