சென்னை: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கவிதா என்பவர் சென்னை 19ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், "இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 'மன்மத லீலை' என்ற திரைப்படம் நாளை (ஏப்ரல் 01) வெளியாக உள்ளது.
இந்த படத்தினுடைய தலைப்பு எங்களுடையது. எனது தந்தை பி.ஆர். கோவிந்தராஜன் மற்றும் தாயார் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து கலக்கேத்திரா மூவிஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அந்த நிறுவனத்தின் மூலமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டப் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் எடுத்து வந்தனர். அதன்படி, கடந்த 1976ஆம் ஆண்டு மன்மத லீலை என்ற படத்தை, என் தந்தை தயாரித்துள்ளதால், எங்களுடைய அனுமதி இல்லாமல் அந்த தலைப்பைப் பயன்படுத்தி படத்தை வெளியிட உள்ளதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு அல்லிகுளத்தில் உள்ள 19ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், இந்த மனு கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் சட்டத்தின்படி சென்சார் செய்யப்பட்ட சான்றிதழ்களின் காலம் பத்தாண்டுகள் மட்டுமே ஆகும் என்றும்; இந்த தலைப்பிற்கான காலம் 1976 தொடங்கி 1986ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது என்பதால், இந்த வழக்கில் தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும்; அதுவரை எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனவும் வாதிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதுவரை படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'RRR' திரைப்படம் பார்த்த அமிதாப் பச்சன்