தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்', 'காதல் ஓவியம்', 'மண் வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'வேதம் புதிது', 'கிழக்குச் சீமையிலே' என பாரதிராஜா பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார். தந்தை பீம்சிங் இயக்கிய 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவரது மனைவி பெயர் காஞ்சனா. இவருக்கு மதுமதி, ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன்-13) பிற்பகல் 2 மணியளவில் கண்ணன் காலமானார். கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்படுகிறது.
அங்கு அவரது உடலுக்கு நாளை (ஜூன்-14) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.