சென்ற வருடம் விஜய் நடித்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த பிகில் திரைப்படம், சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த திரைப்படத்தின் வசூல் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரிதுறையினர் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும், இந்தப் படத்தில் நடித்த நடிகர் விஜய் வீடு மற்றும் மதுரையில் உள்ள அன்புச்செழியனின் நண்பர் சரவணணின் அலுவலகம் உள்ளிட்ட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை மறைத்திருப்பது வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டில் மறைவான இடங்களில் வைத்திருந்த ஆவணங்களைக் கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் படத்தில் பணியாற்றிய நபர்களுக்கு வழங்கப்பட்ட தொகை, காசோலை மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்த விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்தும் விசாரணை செய்தனர்.
நான்கு நாட்களாக அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலங்களில் நடைபெற்ற இச்சோதனையில் சுமார் 165 கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு வரி செலுத்துவதாக அன்புச்செழியன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியன் நடத்தும் 'தர்பார்'