சென்னை: வாச்சாத்தி திரைப்படத்தின் மையக் கதையைத் திருடி விடுதலை முதல் பாகம் படமாக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் ரவி தம்பி தெரிவித்து உள்ளார். வாச்சாத்தி படத்தில் வனக் காவலர்கள் கதாபாத்திரங்களுக்குப் பதிலாக விடுதலை படத்தில் காவலர்கள் நடந்திருப்பதாக இயக்குநர் ரவி தம்பி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ரவி தம்பி கூறியதாவது, "அரூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசும்போது தான், வாச்சாத்தி வன்கொடுமை குறித்தும் அதை நீங்கள் படமாக எடுக்கலாமே என்று சொன்னார். சரி, அப்படி எடுத்து நம்மால் முடிந்த நன்மைகளை செய்யலாம் என்று நினைத்து, வாச்சாத்தி படத்தை நான் பல சிரமங்களுக்கு மத்தியில் எடுத்தேன்.
சென்சாரில் கூட பல சீன்கள் இடம்பெறவில்லை. ஆயினும், அன்றைய இயக்குநர் சங்கத்தின் உதவியுடன் 2012 பிப்ரவரி 10ஆம் தேதி படம் வெளியானது. தற்போது என்னுடைய வாச்சாத்தி படத்தின் கதை, மற்றும் பல காட்சிகளை அப்படியே திருடி விடுதலை பாகம் 1, பாகம் 2 என எடுத்துள்ளார்கள்.
ஆனால், பணம் இல்லாத காரணத்தால் இரண்டாம் பாகம் எடுக்க முடியாமல் நிற்கிறேன். படத்தின் இரண்டாவது பாகம் இறுதி கட்டத்தில் உள்ளது. நாங்கள் முறைப்படி சென்சார் வாங்கி, முறையாகப் படத்தை வெளியிட்டோம். ஆனால், அவர்கள் நுட்பமாக எனது கதையை மட்டும் இல்லாமல், 3 பேரின் கதையைத் திருடி உள்ளனர்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் தங்கள் கதையில் இருந்து எடுத்து உள்ளனர். உண்மைக் கதையை யார் வேண்டும் என்றாலும் எடுக்கலாம். ஆனால், விடுதலை படத்தில் இருக்கும் நிறைய காட்சிகள் எங்கள் படத்தில் உள்ளது. என் படத்தில் வன அலுவலர்கள் இருப்பார்கள். அதற்குப் பதிலாக இந்தப் படத்தில் காவலர்கள் நடித்து உள்ளார்கள். மையப் பகுதியைத் திருடி, காப்பி அடித்து உள்ளார்கள்.
18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தான் அந்தப் படத்தின் கதை. வாச்சாத்தி படத்தில் சென்சாரில் நீக்கப்பட்ட பல காட்சிகள், விடுதலை படத்தில் அப்படியே உள்ளது. அவர்கள் பெரிய இடம் அதனால் தான் சென்சாரில் கூட சில காட்சிகளை நீக்கவில்லை. மேலும், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறோம்.
படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கிராமத்தில் இருந்தோம். அதனால், அப்போது தனக்குத் தெரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, இந்தப் படத்தில் வரும் நிறைய காட்சிகள் என் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளோம். விசாரணை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : +2 தேர்வு: அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க நடிகர் விஜய் திட்டம்?