சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவரான பன்னீர்செல்வம் (47) ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சவாரிக்காக சென்ற பன்னீர்செல்வம் இரவு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ரகிமா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பன்னீர்செல்வத்தை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம் என்பதும் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!