சென்னை பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கடந்த 15 நாள்களாகத் தொகுதி முழுவதும் சூறாவளியாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். நேற்று (ஏப். 1) இரவு குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வீதி வீதியாக நடந்துசென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நமது ஈடிவி பாரத் சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும், அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அளித்த பதில்களும் வருமாறு:
பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
நாங்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக முழுவீச்சில் தொகுதி முழுவதும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றோம். மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்கின்றனர். எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்குத் தற்போது மக்களின் வரவேற்பு எங்களைத் திணறடிக்கின்றது.
தொகுதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?
பல்லாவரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநகராட்சியைக் கொண்டுவர வேண்டும், இத்தொகுதியில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தி அழகுப்படுத்த வேண்டும், தொகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து சாலைகளை விரிவாக்கம் செய்துதர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரும்பாலான கோரிக்கைகள் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியிலிருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடந்த ஐந்து ஆண்டு காலமாக மக்களைச் சந்தித்ததாகத் தெரியவில்லை. நான் தென்சென்னை மக்களவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் பள்ளி கட்டடங்கள், நியாயவிலைக் கடைகள், சமுதாயநலக் கூடங்கள் எனப் பல்வேறு கட்டடங்களைக் கட்டித் தந்துள்ளேன். அது தங்கள் தொகுதியில் நிதிகளின் சான்றுகளாக இருக்கின்றன.
நாங்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எந்த ஒரு நலத்திட்ட உதவியும் செய்ததாகத் தெரியவில்லை. அவர் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். எனவே அவரை வெற்றிகொள்வது சிரமமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'ரஜினி என்னை முதலமைச்சர் வேட்பாளராக அழைத்தார்' - மனம் திறந்த சகாயம்