சென்னை: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (டிச 22) செய்தியாளர்களைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில், "தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இருந்து 49,707 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறை, ராணுவம், கப்பற்படை என அனைத்து துறை சார்பிலும் சுமார் 3400 பேர் இந்த மீட்புப் பணிகள் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் 67 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது மற்ற மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவைத்து, அங்கு நிலைமையைச் சீர்செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, ஹெலிக்காப்டர் மூலம் உணவுகளை வழங்கினோம். அதேபோல், பால் விநியோகம் மெல்ல மெல்லச் சீராகி வருகிறது. சில பகுதிகளில், பால் பவுடர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது தாமிரபரணி ஆறு தான். இதில், 120 திட்டங்களுக்கு மேல் உள்ளது. இதில் 70 திட்டங்கள் பெரிய குடிநீர் திட்டங்கள் ஆகும். அதில் 64 திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் 23 திட்டங்கள் சீர்செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. மீதம் 45 திட்டங்கள் சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட நியாய விலைக்கடைகளையும் சரி செய்யும் பணிகளும், சாலை அமைக்கும் பணிக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் ஊழியர்களை வரவழைத்து இந்த பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 152 சாலைகளில் 117 சாலைகள் சரிசெய்யப்பட்டன. மேலும், நீர் ஆதாரமாக இருக்கும் குளங்கள் ஏரியில் 600 உடைப்புகள் ஏற்பட்டதில் 100 உடைப்புகள் சரிசெய்யப்பட்டு, தொடர்ந்து, 500 உடைப்புகளைச் சரி செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், பணியாளர்கள் என 5,000 பேர் இந்த பணியில் ஈடுபட்டு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறன.
இதுமட்டும் இல்லாது, இது வரை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 3700 குடிசைகள் மற்றும் 170 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 317 மாடுகள், 2587 ஆடுகள், 40ஆயிரத்திற்கு மேலான கோழிகள் உயிரிழந்துள்ளன. மேலும் 1,83,000 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் நீரில் முழுகி உள்ளன. இதற்கான விவசாய துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களைக் குழுவாக அமைத்து இழப்பீடுகளைக் கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கலாசேத்ரா நடன ஆசிரியர் மீது பாலியல் புகார்; 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!