சென்னை: தமிழ்நாட்டிற்கு புனேவிலிருந்து வந்த 4 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 8 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் 11 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. வரும் நாட்களில் கூடுதலாக 6 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.
இன்று (ஜூலை. 26) பெறப்பட்ட 4 லட்சம் தடுப்பூசிகள் தேவை உள்ள மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 2022 பிப்ரவரி மாதத்திற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தேவையான அளவு உள்ளது. ஆனாலும் ஆக்சிஜன் சேமிப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி சந்திப்பு: அடிபணிந்த இபிஎஸ்; அதிமுகவில் பதவியோடு ரீஎன்ட்ரி கொடுக்கும் சசிகலா