சென்னையில் உள்ள அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஒரு தொகுதி சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் ஒட்டு மொத்தமாக 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல் கட்டமாக, தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கடந்த 24ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து துறைமுகம் தொகுதி சார்பாக சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சார்பாக உதயநிதி, திரு வி க நகர் தொகுதி சார்பாக தாயகம் கவி உள்ளிட்டோர் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் மொத்தமாக 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து மயிலாப்பூர் பெரம்பூர், அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பாக 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது.
அதேபோல் இன்று(ஜூன் 3) சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வடசென்னை நாடாளுமன்ற , தி நகர், திருவற்றியூர், ராயபுரம் மற்றும் எழும்பூர் தொகுதி உறுப்பினர்கள் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் என மொத்தமாக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கினர்.
இதுவரையிலும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து 260 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கி உள்ளனர். இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்: நிபுணர் குழு அமைப்பு!