சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”கடந்த 7 மாதங்களாக கரோனா தொற்று காரணமாக சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம்.
நான்கு ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். அதை முறியடித்து மக்கள் நல திட்டங்களை செய்து வருகின்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை, திமுக தலைமை இணைந்து எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிபெறும். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார். திமுக- புதுச்சேரி காங்கிரஸ் மத்தியில் எவ்வித கருத்து வேறுபடும் இல்லை”என்றார்.