சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு முகச்சிதைவு ஏற்பட்டு, அவதிப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் நேரில் சந்தித்தார்.
மேலும் சிறுமியின் மருத்துவ சிகிச்சை மற்றும் செலவை ஏற்றுக்கொள்ள தயார் என்றும், குழந்தையின் மருத்துவ சிகிச்சைகள் முடிவுற்றபின், குழந்தையின் குடும்பத்தினர் வசிக்க அரசு சார்பில் வீடு ஒதுக்கி தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது சிறுமியின் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் உறுதுணையாக இருப்பார் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், “முகச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் கூக்குரல் டெல்லியில் உள்ள முதலமைச்சருக்கு எட்டியதால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி தற்போது அவருக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ஒன்பது மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுமியை கண்காணித்து வருகின்றனர். மேலும் விநாடிக்கு விநாடி சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை வழங்கும்படி, தனக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே விரைவில் சிறுமி நலம் பெறுவார். சிறுமியின் பெற்றோருக்கு வேலை, இருப்பிடம் உள்ளிட்டவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு செலவில் சிகிச்சை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்