சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'சிறுபான்மையினர் உரிமைகள் நாள்' என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் பேசியதாவது:
சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அனாதை பிணங்களைக் கூட தமது தோளில் சுமந்து அடக்கம் செய்தவர்கள் இசுலாமியர்கள். சிறுபான்மையினர் குறித்து சிலர் தவறாக கூறுவது குறிப்பிட்ட ஒரு கட்சியை வளர்ப்பதற்காக சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு, அதில் உண்மை இல்லை" என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ், "கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் வழிபாட்டுரிமைக்கே அச்சுறுத்தல் இருந்தது. சிறுபான்மை என்ற வார்த்தைக்கு சமூக ஊனம் என்று அர்த்தம். மத அரசியல் நடத்துவோர் குறித்து தமிழ்நாடு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
அமைச்சர் கீதா ஜீவன், "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு முறையாக தெரிவித்து வருகிறோம். அதுபோன்ற குற்றங்களை குறைக்க முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஜவஹருல்லா, "திமுக அரசின் சிறுபான்மையினர் நலனுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. சிறுபான்மையினர் நல உரிமையை அங்கீகரிக்காத எந்த நாடும் முன்னேறாது" என்றார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான், "திமுக அரசு மைனாரிட்டி அரசு அல்ல. மைனாரிட்டிகளுக்கான அரசு என்று சொன்னவர் கருணாநிதி. கருணாநிதியிடம் இருந்து பெற்ற அறிவு, ஆற்றல், திறமை, தன்னம்பிக்கையுடன் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்" என்றார்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்